உன்னத சங்கீதம்
சாலமோன் அரசரின் ஓர் சரித்திரப் புகழ் கவிதை இது.
இதன் ஒவ்வோர் வரிகளிலும் காதலின் வாசம்.
( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )
2
என்
என்
சுவாசத்தின் சூட்சுமமே,
மந்தையின்
கால்சுவடுகளை தொடர்ந்து
இடையர்களின்
கூடாரங்களின் அருகே
உன் ஆட்டுக் குட்டிகளை
மேயவிடு.
என் பிரியமே,
நீ,
பாரவோன் மன்னனின்
தேர்ப்படைகளுக்கு நடுவே
உற்சாகமாய் உலவும்
வெண்புரவி.
குழையணிகளால்
உன் கன்னங்களும்,
மணிச்சரங்களாய் கழுத்தும்
எழில்களை ஏராளமாய்
இழுத்து வைத்துள்ளன.
உனக்காய்,
பொன் வளையல்கள் செய்து
அதிலே
வெள்ளி வளையங்கள்
துள்ளி விளையாடச் செய்வேன்.
என் காதலர்
வெள்ளைப் போளமாய்
என்
மார்பில் தங்கிடுவார்.
என் காதலர் எனக்கு
மருதோன்றி மலர்கொத்து.
இளைய தளிர்களால்
இதயம் துளிர்க்கவைக்கும்
எங்கேதித் தோட்ட
மருதோன்றி அவர்.
வென்புறாக்களாய்
சிறகடிக்கின்றன
உனது கண்கள்.
நம்
வீட்டின் விட்டங்கள்
கேதுரு மரங்கள்,
மச்சு தேவதாரு கிளைகள்.
*
சரோன் சமவெளிக்
காட்டு மலர் நான்.
பள்ளத்தாக்கின்
லீலிமலர்.
முட்களின் கூட்டத்தில்
மலர்ந்து கிடக்கும்
லீலி மலராய்
என் காதலன்
இதோ
மங்கையர் நடுவே மலர்கிறான்.
அவர் நிழலில் அமர்ந்து
கனிகள் சுவைப்பது
எத்தனை இனிமை !
அவர்
என்னைப் பார்த்த பார்வையில்
காதல் கலந்தே
இருந்தது.
ஆரோக்கிய உணவளித்து
என்னைத் தேற்றுங்கள்
நான்
காதல் நோயால்
பலவீனமாகிப் போனேன்.
இடது கையின் இடையே
எனைத் தாங்கி,
வலக் கரத்தின் விரலால்
எனை
தழுவிக் கொள்வார் அவர்.
எருசலேம் மங்கையரே
கேளுங்கள்.
காதலை தட்டி எழுப்பாதீர்கள்.
அது
தானே விரும்பி விழிக்கும் வரை
அதன்
தூக்கத்தைக் கலைக்காதீர்கள்.
Post a Comment