உன்னத சங்கீதம்
சாலமோன் அரசரின் ஓர் சரித்திரப் புகழ் கவிதை இது.
இதன் ஒவ்வோர் வரிகளிலும் காதலின் வாசம்.
( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )
10
நான் என்
காதலனின் கைப் பொருள்.
வாரும்,
வைகறை மெல்ல வரும்போது
திராட்சைத் தோட்டத்தில்
போவோம்.
அந்த
துளிர்க்கும் கொடிகளில்,
வெடிக்கும் மொட்டுகளில்,
சிரிக்கும் மரங்களில்
என்
காதல் கொடியும் பூக்கும்.
அங்கே,
என் காதல் மழையை
உம்
கண்கள் முழுதும் பொழிவேன்.
உம் நெஞ்சத்தில்
முத்திரையாய் என்னை
பொறித்திடுக.
அன்பு
சாவைப் போல சக்தியானது.
அன்பு வெறி
பாதாளம் போல
நிரப்ப இயலாத பள்ளம்,
அதன் பொறி
தீராப் பசியின் தீக் கொழுந்து.
பெருங்கடல்
உருண்டு வந்தாலும் அதை
அணைத்தல் இயலாது.
வெள்ளப் பெருக்கின் கால்களும்
அதை
மிதித்து அழிக்க
முடியாது.
விலைமதிப்பில்லா
தோட்டத்தில் வாழ்பவளே,
உன் குரலை
யான் கேட்கலாகாதோ ?
என் காதலரே,
விரைந்து ஓடிடுக.
கலைமான் அல்லது
மரைமான் குட்டிபோல
மலைகளுக்கு ஓடிடுக.
எருசலேம் மங்கையரே,
மீண்டும் மீண்டும்
ஆணையிடுகிறேன்.
தூங்கும் காதலை எழுப்பாதீர்கள்
அது தானாய்
விழிக்கும் வரை துயில விடுங்கள்.
Post a Comment