பைபிள் கதைகள்
வாழ்த்தாய் மாறிய சாபம் - பைபிள் கதைகள்
அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.
பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.
அந்த நாட்டு மன்னன் பாலாக் இஸ்ரயேலர்களைக் கண்டு பொறாமைப் பட்டான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒரே குழுவாகவும் தங்கியிருந்ததும், அவர்களிடையே இருந்த ஏராளமான செல்வங்கள், கால்நடைகள் இவைகளும் அவனை பொறாமைப் பட வைத்தன. எப்படியாவது அவர்களிடமிருந்து அவற்றையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்று மன்னன் திட்டமிட்டான்.
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக வீழ்த்தமுடியாது. ஏதேனும் சூழ்ச்சி செய்து தான் அவர்களை வீழ்த்தவேண்டும் என்று பாலாக் திட்டமிட்டான். அவனுடைய மனதில் பிலேயாம் வந்தார்.
பிலேயாம் இறைபக்தர். அவர் ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்வார். அவர் ஒருவனை சபித்தால் அவன் அழிவுறுவான். எனவே பிலேயாமை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செய்யவேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.
பாலாக்கின் வீரர்கள் பிலேயாமின் இல்லத்தில் வந்து நின்றனர்.
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’
‘நான் ஏன் மன்னனைச் சந்திக்கவேண்டும் ? ஏதேனும் முக்கியமான விஷயமா ?’ பிலேயாம் கேட்டார்.
‘ஆம். இஸ்ரயேல் மக்கள் நம்முடைய மோவாப் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை நீர் சபிக்க வேண்டுமாம் ‘ வீரர்கள் சொன்னார்கள்.
பிலேயாம் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது கடவுள் அவரோடு பேசினார். ‘ பிலேயாம்.. நீ பாலாக்கின் வீரர்களோடு போகவேண்டாம். இஸ்ரயேல் மக்கள் என்னுடையவர்கள். அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சபிக்கப் படவேண்டியவர்கள் அல்ல’
பிலேயாம் கண்களைத் திறந்தார். ‘ இல்லை. நான் உங்களோடு வர முடியாது. இஸ்ரயேல் மக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை நான் சபிக்கமுடியாது என்று மன்னனிடம் போய்ச் சொல்’ பிலேயாம் தெளிவாகச் சொன்னார்.
வீரர்கள் மன்னனிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, மன்னன் கடும் கோபமடைந்தார்,
‘உயிர் மீது அவருக்கு ஆசையிருந்தால் உடனே என்னிடம் வரச் சொல்லுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.
இரண்டாவதாக வீரர்கள் சிலர் பிலேயாமைச் சந்திக்கச் சென்றார்கள்.
‘நீர் உடனே மன்னனைச் சந்தித்தாகவேண்டும். இது அரச கட்டளை. இல்லையேல் இங்கேயே உமது தலையை வெட்டி வீசுவோம்’ வீரர்கள் எச்சரித்தார்கள்.
பிலேயாம் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார். அவர்கள் அவரை ஒரு கழுதையின் மீது அமரவைத்து அழைத்துச் சென்றனர். கடவுள் இதைக் கண்டு கோபமடைந்தார்.
‘பாலாக்கைச் சந்திக்க வேண்டாமென்றல்லவா நான் சொன்னேன். இஸ்ரயேலர்களைச் சபிக்க வேண்டாமென்றல்லவா நான் கூறினேன்.. பிலேயாம் என் வார்த்தைகளை மீறிவிட்டானே ‘ என்று வருந்தினார். உடனே தன்னுடைய தூதர் ஒருவரை அனுப்பி அவரை வழிமறிக்குமாறு சொன்னார்.
பிலேயாம் கழுதையில் சென்றுகொண்டிருந்தபோது கடவுளின் தூதர் வாளுடன் அவருக்கு எதிரே வந்து நின்றார். அவர் பிலேயாமின் கண்களுக்குத் தெரியவில்லை. கழுதையின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். கழுதை அவரைக் கண்டதும் விலகி ஓடியது. பிலேயாம் கழுதையை அடித்தார்.
கழுதை இருபுறமும் மதில்சுவரால் கட்டப்பட்ட வழியில் ஓடியது. கடவுளின் தூதர் இருபுறத்திலுமிருந்து கழுதையை நெருக்கினார். கழுதை பயணிக்கச் சிரமப்பட்டது. பிலேயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார்.
மீண்டும் கடவுளின் தூதர் கழுதையின் முன்னால் வந்து நின்று வாளை ஓங்கினார். உடனே கழுதை தரையில் படுத்தது. பிலேயாமின் கோபம் கரைகடந்தது. கழுதையை மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தார்.
உடனே கழுதை… ‘பிலேயாம்.. ஏன் என்னை அடிக்கிறாய் ?’ என்று கேட்டது.
கழுதை பேசியதைக் கேட்ட பிலேயாம் நடுங்கினார்.
‘நீ என்னை ஏன் மூன்று முறை அடித்தாய் ? கடவுளின் தூதர் வாளோடு என்னை வழிமறிக்கிறாரே’ கழுதை சொன்னதும் பிலேயாம் தன் தவறை உணர்ந்தார். இஸ்ரயேல் மக்களைச் சபிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.
அப்போது கடவுளின் தூதர் அவருடைய கண்களுக்கும் தரிசனமானார். ‘ நீர் போய் கடவுள் சொல்வதை பாலாக்கிற்குச் சொல்லும்’ தூதர் சொன்னார். பிலேயாம் தெளிவு பெற்றவராய் மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.
பாலாக்கின் அரண்மனை.
பிலேயாமிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசன் உட்பட அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
‘இதோ.. பிலேயாம் நம்மிடம் வந்திருக்கிறார். இனிமேல் வெற்றிகள் எல்லாம் நமக்கே. பிலேயாம், உம் வாயால் அந்த இஸ்ரயேல் மக்களைச் சபியுங்கள் ‘ மன்னன் ஆனந்தமாய்க் கூறினான்.
‘அரசே… கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் சொல்வேன். மன்னன் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.’ பிலேயாம் அமைதியாகச் சொன்னார். மன்னன் புரியாமல் பார்த்தான்.
‘இஸ்ரயேல் மக்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் மீது சாபம் வராது’ பிலேயாம் சொன்னார்.
உடனே மன்னனும், கூட இருந்தவர்களும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மக்கள். அவர்களை வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவார்கள், சபிப்போர் சாபத்துக்கு ஆளாவார்கள். நானும் இஸ்ரயேல் மக்களை வாழ்த்துகிறேன்…’ பிலேயாம் மீண்டும் சொன்னார். மன்னனின் முன்னிலையில், அனைத்து அரசவை ஊழியர்களின் முன்னிலையில் பிலேயாம் கடவுள் தன்னுடன் இருக்கும் தைரியத்தில் துணிந்து நின்றார்.
பிலேயாமின் வார்த்தைகளைக் கேட்ட பாலாக் மன்னன் கோபமடைந்தான். பிலேயாமை ஏதேனும் செய்தால் கடவுளின் சாபம் தனக்கு வந்துவிடுமோ என்று பயந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வரவிருந்த சாபத்தை, வாழ்த்தாக மாற்றியதை அறிந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்
Post a Comment