இஸ்ரயேலரின் முதல் மன்னர் - சவுல்
இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்
இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டும் தலைவராக சாமுவேல் இருந்த காலம், பெலிஸ்தியர்கள் அடிக்கடி இஸ்ரயேலர்கள் மீது போர் தொடுத்து வந்தார்கள். இஸ்ரயேல் குலத்தினருக்குக் கடவுள் எப்போதும் நிறைவான வளங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து வந்தார்.
சாமுவேலுக்கு வயதான காலத்தில் மக்கள் சாமுவேலிடம் வந்தனர்.
‘எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும்.’ மக்கள் முறையிட்டனர்.
சாமுவேல் திடுக்கிட்டார். ‘ என்ன ? அரசனா ? உளறாதீர்கள். கடவுள் மட்டுமே நம் அரசர். வேறு ஒரு அரசர் நமக்குத் தேவையில்லை’ சாமுவேல் பதில் சொன்னார்
‘கடவுள் வானத்தில் அல்லவா இருக்கிறார். எங்களுக்கு பூமியில் ஒரு அரசர் வேண்டும்…’ மக்கள் மீண்டும் கூறினர்.
‘எதற்கு உங்களுக்கு அரசன் ? என்ன குறை உங்களுக்கு ?’ சாமுவேல் கேட்டார்.
‘ஏதேனும் போர் வந்தால் முன்னின்று வழிநடத்துவதற்கேனும் எங்களுக்கு ஒரு அரசன் வேண்டாமா ?’ மக்கள் கூறினர்.
‘அரசன் வந்தால் என்ன செய்வான் தெரியுமா ? உங்கள் மக்களை அவனுடைய படை வீரர்களாகவும், பணியாளர்களாகவும், உங்கள் பெண்களை வேலைக்காரர்களாகவும் வைத்துக் கொள்வான்’ சாமுவேல் எச்சரித்தார்.
‘அது பரவாயில்லை….’ மக்கள் சொன்னார்கள்.
‘உங்கள் மீது இன்னும் அதிகமான வேலைகளைத் தருவான். ஆணைகள் இட்டு அதன் படி நடக்கக் கட்டாயப் படுத்துவான். உங்களுக்கு இப்போது இருக்கும் சுதந்திரம் இல்லாமல் போய்விடும்’ சாமுவேல் மீண்டும் எச்சரித்தார்.
‘அதுவும் பரவாயில்லை..’ மக்கள் பிடிவாதம் பிடித்தனர்.
‘உங்கள் சொத்துகளின் பத்தில் ஒரு பாகத்தைக் கேட்பான்… உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை அவன் எடுத்துக் கொள்வான்….’சாமுவேல் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.
‘அது தான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டோமே… எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ மக்கள் உறுதியாய் கூறினர்.
‘சரி… உங்களுக்காக நான் கடவுளிடம் பேசி ஒரு நல்ல அரசனை அமர்த்துகிறேன். ஆனால் அதன் பின்பு நீங்கள் வந்து அரசனை நீக்கி விடும் என்று சொன்னால்.. அது நிறைவேறாது. அரசனை அமர்த்தினால் பின் அவன் சொல்வது தான் சட்டம்.. சம்மதமா ?’ சாமுவேல் கடைசியாகக் கேட்டார்.
‘சம்மதம்,… சம்மதம்…. எல்லாவற்றுக்கும் சம்மதம்… ‘ மக்கள் கூறினர்.
‘சரி… அப்படியே செய்கிறேன்…’ சாமுவேல் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.
தூரதேசத்தில் இஸ்ரயேலின் கிளைக்குலமான பென்யமின் குலத்தில் கீசு என்னும் ஒரு வீரன் இருந்தான். அவனுக்கு சவுல் என்னும் அழகான, வலிமையான ஒரு மகன் இருந்தான். இஸ்ரயேல் குலத்திலேயே அவனைப்போல அழகும், உயரமுமான ஒரு நபர் இல்லை என்னுமளவுக்கு சவுல் இருந்தார்.
ஒருமுறை அவருடைய தந்தையின் கழுதைக் கூட்டம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடுவதற்காக சவுல், பணியாளன் ஒருவனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அவர்கள் இருவருமாக கழுதைகளைத் தேடி பல்வேறு ஊர்களுக்குச் சென்றனர். எங்கும் அவர்களின் கழுதைக் கூட்டங்களைக் காணோம்.
இதே நேரத்தில் சாமுவேலிடம் கடவுள் பேசினார்.
‘சாமுவேல்… நீ இஸ்ரயேல் மக்களுக்கு அரசனைக் கண்டுபிடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. பென்யமின் குலத்தைச் சேர்ந்த ஒருவனை நான் உன்னிடம் அனுப்புகிறேன். அவனைக் கண்டதும் நீ அறிந்து கொள்வாய்’ என்றார். சாமுவேல் கடவுளின் வார்த்தையை மனதில் வாங்கிக் கொண்டார்.
‘சாமுவேல்… நீ இஸ்ரயேல் மக்களுக்கு அரசனைக் கண்டுபிடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. பென்யமின் குலத்தைச் சேர்ந்த ஒருவனை நான் உன்னிடம் அனுப்புகிறேன். அவனைக் கண்டதும் நீ அறிந்து கொள்வாய்’ என்றார். சாமுவேல் கடவுளின் வார்த்தையை மனதில் வாங்கிக் கொண்டார்.
கழுதைகளைத் தேடித் தேடி சோர்வுற்ற சவுலும், பணியாளனும் சாமுவேல் இருக்கும் ஊருக்குள் வந்தார்கள்.
சவுல் பணியாளனிடம்,’ வா… நாம் திரும்பிப் போவோம். அப்பாவுக்கு இப்போது கழுதைகளைப் பற்றிய கவலை போய், நம்மைப் பற்றிய கவலை வந்திருக்கும்.’ சவுல் சொன்னார்.
‘இது வரை வந்து விட்டோம்… இந்த ஊரிலும் கூட தேடிப் பார்ப்போமே ‘ பணியாளன் விண்ணப்பித்தான்.
‘நம்மிடம் உண்பதற்கு அப்பங்கள் கூட இல்லை. எல்லாம் தீர்ந்து விட்டன. எனவே தாமதிப்பது நல்லதல்ல’ சவுல் சொன்னார்.
‘அப்படியானால் இங்கே ஒரு இறையடியார் இருக்கிறார். அவர் பெரும் தீர்க்கத்தரிசி. அவரிடம் போய் நம் கழுதைகள் கிடைக்குமா ? எங்கே கிடைக்கும் என்று கேட்டு வருவோம்’ என்றான் பணியாளன்.
சவுல் சம்மதித்தார். இருவரும் சாமுவேலைச் சந்திக்கச் சென்றனர். போகும் வழியிலேயே அவர்கள் சாமுவேலைக் கண்டனர். அவர்களுக்கு அவர்தான் சாமுவேல் என்று தெரியாது.
‘ஐயா… இங்கே சாமுவேல் என்று ஒரு திருக்காட்சியாளர் இருக்கிறாராமே ? அவரை நாங்கள் எங்கே சந்திக்கலாம் ?’ சவுல் கேட்டார்.
சாமுவேலுக்கு கடவுள் சொன்ன அனைத்தும் சட்டென விளங்கின. இவர்தான் அடுத்த அரசர் என்பது சாமுவேலுக்குப் புரிந்தது.
‘நீ பென்யமின் குலத்தினன் தானே ?’ சாமுவேல் கேட்டார்.
‘ஆம் ஐயா… உங்களுக்கு எப்படித் தெரியும் ?’ சவுல் ஆச்சரியப் பட்டான்.
‘உன்னுடைய கழுதைகள் எல்லாம் பிடிபட்டன. நீ கவலைப் படவேண்டாம். நீ இன்று என்னோடு விருந்து உண்’ சாமுவேல் சொன்னார்.
சவுல் வியந்தார். ‘ நாங்கள் கழுதைகளைத் தேடித் தான் வந்தோம் என்பதும், கழுதைகள் பிடிபட்டன என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பெரியவர் தான். தயவு செய்து நீங்கள் யாரென்று சொல்லுங்கள்’ சவுல் அமைதியாகக் கேட்டார்.
‘நான் தான் சாமுவேல்… பயப்படாதீர்கள்.. இன்று என்னோடு விருந்து உண்ணுங்கள்’ என்றார்.
அன்று சவுல் சாமுவேல் அழைத்த விருந்தில் கலந்து கொண்டார். சவுலை சாமுவேல் மிகவும் பலமாக உபசரித்தார்.
மறுநாள் காலையில் சாமுவேல் சவுலை தனியே அழைத்துச் சென்று ஒரு தைலக் குப்பியை எடுத்து அவர் தலை மீது தைலம் வார்த்து அவரை முத்தமிட்டார்.
மறுநாள் காலையில் சாமுவேல் சவுலை தனியே அழைத்துச் சென்று ஒரு தைலக் குப்பியை எடுத்து அவர் தலை மீது தைலம் வார்த்து அவரை முத்தமிட்டார்.
‘சவுல்… நீ வருவாய் என்றும் என்னைச் சந்திப்பாய் என்றும் கடவுள் என்னிடம் ஏற்கனவே கூறினார்’ சாமுவேல் ஆரம்பித்தார்.
‘நான் வருவேன் என்பதைக் கடவுள் சொன்னாரா ? ஏன் ? ‘ சவுல் குழம்பினார்.
‘நீ தான் இனிமேல் இந்த இஸ்ரயேல் குலத்துக்கே அரசனாக வேண்டும். அது தான் கடவுளின் விருப்பம்’ சாமுவேல் சொன்னார்.
‘ஐயோ… எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் பென்யமின் என்னும் சிறிய குலத்தில் பிறந்தவன். என் தந்தை என்னைத் தேடிக் கொண்டிருப்பார் நான் போகவேண்டும்…’ சவுல் எழுந்தார்.
‘சவுல்…. பயப்படாதே. நீ போகலாம். போகும் போது நாட்டின் எல்லையில் இரண்டு பேர் உன்னைச் சந்திப்பார்கள். அவர்கள் உன்னிடம்… கழுதைகள் எல்லாம் கிடைத்துவிட்டன என்பார்கள். மீண்டும் நீ பயணமாகி தாபோர் சமவெளியை அடையும் போது மூன்று ஆடுகள், மூன்று அப்பங்கள், திராட்சை ரசம் கொண்டு ஆலயத்துக்கு வழிபாட்டுக்குப் போகும் மூன்றுபேரை நீ சந்திப்பாய்… அவர்கள் உனக்கு இரண்டு அப்பங்கள் தருவார்கள் அவர்களிடம் வாங்கிக் கொள்.’ சாமுவேல் சொன்னார்.
சவுல் ஒன்றும் புரியாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘அதன்பின் நீ பெலிஸ்தியரின் காவலில் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கிருந்து இறங்கி வரும் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அப்போது ஆண்டவரின் ஆவியை நீ பெற்றுக் கொள்வாய். அதன் பின் உனக்குத் தோன்றுவதைச் செய்… காரணம் அதன்பின் உன்னைக் கடவுள் வழி நடத்துவார்’ சாமுவேல் சொல்லச் சொல்ல சவுல் வியப்பும், பயமும் கலந்த மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தான்.
‘சரி… இனிமேல் நீ போகலாம்’ சாமுவேல் சவுலை வாழ்த்தி அனுப்பினார்.
போகும் வழியிலேயே சாமுவேல் சொன்ன அனைத்தும் ஒவ்வொன்றாய் நடைபெற்றன.
நாட்டு எல்லையை அடைகையில் இருவர் வந்து கழுதைகள் அகப்பட்டன என்றார்கள். சமவெளியை அடைகையில் இரு அப்பங்கள் கொடுக்கப் பட்டன. கடவுளின் மலையை நெருங்குகையில் இறைவாக்கினர் அவரைச் சந்தித்தார்கள்.
நாட்டு எல்லையை அடைகையில் இருவர் வந்து கழுதைகள் அகப்பட்டன என்றார்கள். சமவெளியை அடைகையில் இரு அப்பங்கள் கொடுக்கப் பட்டன. கடவுளின் மலையை நெருங்குகையில் இறைவாக்கினர் அவரைச் சந்தித்தார்கள்.
இறைவாக்கினர்களைச் சவுல் சந்தித்ததும் ஆண்டவரின் வல்லமை அவர் மேல் வந்தது. அவர் ஆடிப் பாடவும் இறைவாக்கினர்கள் போல உரையாற்றவும் துவங்கினார். சவுலை அறிந்திருந்த மக்களெல்லாம ஆச்சரியப் பட்டார்கள். ‘சவுலுக்கு என்னாயிற்று இதற்குமுன் நாம் இவரை இப்படிப் பார்த்ததில்லையே ?’ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
இதே நேரத்தில் சாமுவேல் அரசனைத் தெரிந்தெடுப்பதற்காக மக்கள் அனைவரையும் கூட்டி, இஸ்ரயேல் குலத்தினரையும், அதிலுள்ள அனைத்து கிளை குலத்தின் பெயர்களையும் சீட்டில் எழுதிக் குலுக்கினார். அதில் சவுலின் குலமான பென்யமின் குலம் வந்தது !
பென்யமின் குலத்தினர் பெயரை எழுதி சீட்டு எடுக்கையில் மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது.
பின் அவர் மதிரி குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டார். எடுத்த சீட்டு சவுல் பெயருக்கு விழுந்தது !
‘சவுல் தான் நம்முடைய புதிய மன்னன்’ மக்கள் எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் சவுலை எங்கும் காணோம். அவர் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் ஒளிந்து கொண்டிருந்தார். எல்லோரும் சவுலைத் தேடினார்கள். யாராலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் நாலா திசைகளிலும் சவுலைத் தேடிப் புறப்பட்டார்கள்.
‘சவுல் தான் நம்முடைய புதிய மன்னன்’ மக்கள் எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் சவுலை எங்கும் காணோம். அவர் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் ஒளிந்து கொண்டிருந்தார். எல்லோரும் சவுலைத் தேடினார்கள். யாராலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் நாலா திசைகளிலும் சவுலைத் தேடிப் புறப்பட்டார்கள்.
சாமுவேல் மெளனமாகக் கடவுளிடம் வேண்டினார்.
‘சவுல் இதோ பொருட்குவியலிடையே ஒளிந்திருக்கிறான்’ என்று கடவுள் சாமுவேல் காதில் கூறினார்.
சாமுவேல் நேராகச் சென்று சவுலை அழைத்து மக்கள் மத்தியில் நிறுத்தினார். சவுல் தயக்கத்துடன் நின்றார்.
‘இதோ ! இவர் தான் சவுல் ! இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னர் !! மன்னரை வாழ்த்துங்கள்’ என்றார்.
சவுல் அங்கு கூடியிருந்த அனைத்து மக்களையும் விட உயரமாகவும், வலிமையாகவும், அழகாகவும் இருந்தார்.
சவுல் அங்கு கூடியிருந்த அனைத்து மக்களையும் விட உயரமாகவும், வலிமையாகவும், அழகாகவும் இருந்தார்.
மக்கள் மகிழ்ச்சியுடன் ‘ அரசர் வாழ்க ‘ என்று கோஷங்கள் எழுப்பினர்.
சவுல் இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னரானார்.
Post a Comment