இயேசு சொன்ன உவமைகள் காய்க்காத அத்திமரம்
காய்க்காத அத்திமரம் பைபிள் கதைகள்
லூக்கா 13 : 6..9
“ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”
இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.
தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.
திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன ?
இங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.
தோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.
அத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடிக் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.
இங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.
மகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.
இங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.
இயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.
இப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா ?
கனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.
அப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.
இனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.
கனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.
அத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.
கனி கொடுத்தால் விண்ணக வாழ்வாகிய மீட்பு.
கனி தர மறுத்தால் நெருப்பு நரகத்தில் அழிவு.
கனி தர மறுத்தால் நெருப்பு நரகத்தில் அழிவு.
நமது வாழ்க்கையை மறு பரிசீலனை செய்வோம். நமது வாழ்க்கை கனிதரும் வாழ்வாய் இருக்கிறதா ? நாம் கனிதர இறைமகனின் உதவியை நாடுகிறோமா ? நமது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதா இல்லை ஏமாற்றமுடையதா ? பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து திருந்தியிருக்கிறோமா ? நம்மை நாமே ஆராய்கிறோமா ?
சிந்திப்போம்.
கனி தருவதே மரத்தின் பணி.
கனி தராவிடில் வாழ்வேது இனி.
கனி தருவதே மரத்தின் பணி.
கனி தராவிடில் வாழ்வேது இனி.
-writer Xavier
Post a Comment